கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.
வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக
32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை
வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.